ஆஷஸ் முதல் டெஸ்ட் அணியில் மாற்றம்: கோன்ஸ்டாஸ் வெளியே – ஜேக் வெதரால்ட் புதிய முகம்!
நவம்பர் 21 முதல் பெர்த் மைதானத்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியில் ஓப்பனர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் அணியில் இடம் பெறவில்லை.
இதற்குப் பதிலாக 31 வயதான தெற்கு ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஜேக் வெதரால்ட் முதல் முறையாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீபிஎல் லீக்கில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காகவும், 76 முதல் தரப் போட்டிகளில் 5,269 ரன்களுடன் 13 சதங்கள், 26 அரை சதங்களுடன் 37.63 சராசரியில் விளங்கியுள்ளார். சமீபத்திய ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் 906 ரன்கள் (சராசரி 50.33) எடுத்து சிறந்த ஆட்டக்காரராக திகழ்ந்தார்.
சமீபத்திய சரிவுக்குப் பிறகு விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், குவீன்ஸ்லாந்துக்காக தொடர்ந்து 5 சதங்கள் அடித்ததையடுத்து மார்னஸ் லபுஷேன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் மூன்றாம் இடப் பேட்ஸ்மேனாக திரும்பியுள்ளார். அனுபவ ஓப்பனர் உஸ்மான் கவாஜாவும் தொடர்ச்சியாக அணியில் உள்ளார்.
மேற்கு இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்ற சாம் கோன்ஸ்டாஸ் தொடர் தோல்வியால் நீக்கப்பட்டார். மேத்யூ ரென்ஷா மற்றும் மிட்செல் மார்ஷும் இதில் இடம் பெறவில்லை, ஏனெனில் ஆல்ரவுண்டர்கள் கேமரூன் கிரீன் மற்றும் பியூ வெப்ஸ்டர் அணியில் ஏற்கனவே உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (கே), ஷான் அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாக்கெட், கேமரூன் கிரீன், ஜாஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கே), ஹாரி புரூக் (உதவி கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேகப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜாஷ் டங், மார்க் உட்.