மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் லட்சக்கணக்கான புறாக்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – ஜெயின் துறவி உயிர்த்தியாக உண்ணாவிரதம்
மும்பை நகரத்தின் பல பகுதிகளில் புறாக்கள் பெருமளவில் வாழ்கின்றன. நகர மக்கள் அவற்றுக்கு விதை, தானியங்கள் வழங்குவது வழக்கம். ஆனால் புறாக்களின் கழிவுகள் நகரத்தை அசுத்தப்படுத்தி, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட சுவாச நோய்கள் பரவுவதாக புகார்கள் அதிகரித்தன.
இதையடுத்து, மகாராஷ்டிர அரசு ஜூலை 3 முதல் நகரில் உள்ள 51 புறா கூடுகளை அகற்றியது. தாதர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்த கூடுகள் பிளாஸ்டிக் தடுப்புகளால் மூடப்பட்டன. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தடை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும் புறாக்களுக்கு உணவளித்ததற்காக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் சுமார் ஒரு லட்சம் புறாக்கள் இறந்துவிட்டதாக ஜெயின் துறவி நிலேஷ் சந்திர விஜய் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மும்பை ஆசாத் மைதானத்தில் உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். தாதர் பகுதியிலுள்ள புறா கூடுகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நிலேஷ் சந்திர விஜய் கூறியதாவது:
“மும்பையில் நூற்றாண்டுகளாக புறாக்கள் வாழ்கின்றன. அவற்றை பாதுகாப்பது எங்கள் ஜெயின் மத மரபின் ஒரு பகுதி. கூடுகளை மூடும் செயல், நிரபராத பறவைகளை கொல்வதற்கு சமமானது. இது உயிர்களை காக்கும் அமைதியான போராட்டம். தினமும் 50–60 காயமடைந்த புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.
இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, வோர்லி நீர்த்தேக்கம், அந்தேரி சதுப்பு நிலப்பகுதி, ஐரோலி–முலுண்ட் எல்லைச் சோதனைச்சாவடி, போரிவலி கோரேகான் மைதானம் போன்ற இடங்களில் புறாக்களுக்கு தானியமளிக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.