“கடவுளின் திட்டம் தான்” – உணர்ச்சியாக பேசிய ஷபாலி வர்மா
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
இந்த சாதனையில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மாவின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. 78 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்த அவர், மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இளம் வீராங்கனை என்ற சாதனையும் படைத்தார்.
பேட்டிங்குடன் பந்துவீச்சிலும் மிளிர்ந்த ஷபாலி, நெருக்கடியான தருணத்தில் 2 விக்கெட்கள் எடுத்து இந்தியாவை முன்னிலை நோக்கி தள்ளினார். 299 ரன்களை விரட்டிய தென் ஆப்பிரிக்கா, ஒரு கட்டத்தில் 113/2 என வலுவாக இருந்த நிலையில், சுனே லூஸ் மற்றும் மரிஸான் காப் ஆகியோரை தொடர்ந்து ஆட்டமிழக்கச் செய்தார்.
ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் — உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் ஷபாலி தேர்வாகவில்லை. அவ்வப்போது சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். நியூஸிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்த பிரதிகா, வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்து விலக, ஷபாலிக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் சூரத்தில் நடைபெற்ற டி20 தொடருக்காக பயிற்சி பெற்று கொண்டிருந்த ஷபாலி உடனடியாக அணியுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அரையிறுதியில் விரைவில் அவுட் ஆனாலும், இறுதியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தார்.
இறுதிப்போட்டிக்குப் பிறகு ஷபாலி கூறியது:
“அரைஇறுதிக்கு முன் அழைப்பு வந்தது எனக்கு அதிர்ச்சி. இது கடவுளின் திட்டம் என்று நான் நம்புகிறேன். இறுதியில் ரன்கள் எடுத்து, விக்கெட்களை எடுத்து வெற்றி பெறுவது கனவு நனவாகியது.”
அவர் மேலும் கூறினார்:
- “அணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து அனைவரும் எனக்கு நம்பிக்கை தந்தனர்.”
- “பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத், பயமின்றி இயல்பான ஆட்டத்தை விளையாடு என்று சொன்னார்கள்.”
- “ஆரம்பத்தில் தேர்வு செய்யப்படாதது வேதனை. ஆனால் சக வீராங்கனைகளும் குடும்பமும் ‘நீ திரும்புவாய்’ என்று ஊக்கமளித்தது.”
- “ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அரையிறுதி வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது.”
இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு ஷபாலி வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.