“உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்” – முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர்
பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்த மருத்துவர் மகேந்திர ரெட்டி (34) மற்றும் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் கிருத்திகா ரெட்டி (28) ஆகியோர் 2024 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் 12 அன்று கிருத்திகா திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சந்தேகத்துக்கிடமான மரணம் என போலீஸார் விசாரணை தொடங்கினர். பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வில், கிருத்திகாவின் உடலில் ‘பிரபோல்’ எனப்படும் மயக்க மருந்து அதிக அளவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாரத்தஹள்ளி போலீஸார் மகேந்திர ரெட்டியை கொலை குற்றச்சாட்டில் அக்டோபர் 14ஆம் தேதி கைது செய்தனர்.
விசாரணையின் போது, அவரது செல்போனை போலீஸார் பரிசோதித்தபோது, கொலை நடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு, மகேந்திர ரெட்டி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது தொடர்பில் இருந்த முன்னாள் காதலிக்கு, “உனக்காகத்தான் என் மனைவியைக் கொன்றேன்” என்று செய்தி அனுப்பியிருந்தது தெரியவந்தது.
இவரை அந்த பெண் சமூக வலைத்தளங்களில் (WhatsApp, Facebook) தடுப்புப் பட்டியலில் சேர்த்திருந்ததால், அவர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலி வழியாக குறுஞ்செய்தி அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மகேந்திர ரெட்டி WhatsApp மற்றும் Telegram மூலமாக நான்கு பெண்களுக்கு இதே போன்ற செய்திகளை அனுப்பியதும் போலீஸார் தெரிவித்தனர்.