சாலையோர கடைகளால் விற்பனை சரிவு: ஈரோடு ஜவுளி கடை உரிமையாளர்கள் சாலை மறியல்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அமைந்துள்ள மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகம் சிறப்பாக அமையும் என எதிர்பார்த்த கடை உரிமையாளர்கள், மக்கள் வருகை குறைந்ததை கண்டும் திடீரென அதிருப்தி தெரிவித்தனர்.
வணிகம் சரிவடைந்ததற்குக் காரணமாக சாலையோரத்தில் அமைக்கப்பட்ட ஜவுளி கடைகள் தான் என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, மணிக்கூண்டு அருகே நேற்று மாலை கடை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கடை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் பல தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வணிக வளாகத்திற்குள் மக்கள் வருகை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து வணிகர்கள் ஏற்கனவே மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை எஸ்பி ஆகியோரிடம் மனு அளித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,” என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினர் சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, கடை உரிமையாளர்கள் மறியலை வாபஸ் பெற்றனர்.
இந்த சம்பவத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.