ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற பின்னர், இந்தியாவில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளனர். வாகா–அட்டாரி எல்லையில் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் மலர்தூவி, பூக்கொத்து வழங்கி வரவேற்றனர்.
ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர். இதன் பின்னணியில், இந்தியா–பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்தது. தற்போது சூழல் குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சீக்கியர்களின் இந்த யாத்திரை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
சீக்கிய சமயத்தின் நிறுவனர் குருநானக் பிறந்த இடமான நான்கானா சாஹிப் மற்றும் அவர் மறைந்த கர்தார்பூர் உள்ளிட்ட முக்கிய புனிதத் தலங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இத்தலங்களுக்கு சீக்கியர்கள் அடிக்கடி தரிசனம் செய்வதும் வழக்கம்.
குருநானக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியுள்ளது. விசா பெற்ற பக்தர்கள் இன்று காலை பாகிஸ்தானில் நுழைந்து நான்கானா சாஹிப் வழிபாட்டுத் தளத்தில் பிராத்தனை செய்தனர். அதன் பின்னர் கர்தார்பூர் உள்ளிட்ட பிற புனித தலங்களுக்கும் செல்ல உள்ளனர்.
இந்திய பக்தர்களின் வருகை மத நல்லிணக்கம் மற்றும் கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிக்கிறது என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.