ஆண்டிப்பட்டி சடையாண்டி கோயில் திருவிழா: 105 கிடா பலியிட்டு ஆண்கள்-only அசைவ விருந்து
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சடையாண்டி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி மாத திருவிழா ஆண்கள்-only பாரம்பரியத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று (நவம்பர் 3) நள்ளிரவில் தொடங்கிய இந்த விழாவில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருவிழா மரபின்படி பெண்களுக்கு வரமில்லை; இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். டி.அணைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, 105 கிடாக்கள் பலியிட்டு அசைவ உணவு பிரமாண்டமாக சமைக்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய விருந்து இன்று காலை வரை நீடித்து, ஆயிரக்கணக்கான ஆண்கள் உணவருந்தினர்.
இந்த வழிபாடு பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். “குடும்ப நலமும், கிராம வளர்ச்சியும், ஆண்களின் மனவலிமையும் அதிகரிக்க இந்த திருவிழாவை நடத்துகிறோம்” என அவர்கள் கூறினர்.