டெல்லி எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து; உயிரிழப்பு இல்லை
டெல்லி பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கி வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் பல இடங்களுக்கு பரவி, புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் கிடைத்தவுடன், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது பெரிய அளவு சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம், குடியிருப்பில் இருந்த தீயணைப்பு உபகரணங்கள் சரியாக செயல்படவில்லை என சில குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.