வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் — ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தல்
நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, இதுவரை வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர நவீன கால அறிஞர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.
பாரம்பரிய குருகுல முறையில் நடத்தப்படும் தெனாலி சாஸ்திர பரீட்சை என்ற ஆறு ஆண்டு கால பாடத்திட்டத்தில் 16 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த 12 சாஸ்திர அறிஞர்களை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டி ஆசி வழங்கினர்.
இந்த நிகழ்வில், பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயத்தை பாதுகாப்பதில் சிறந்து விளங்கும் அறிஞர்களின் கல்வித் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை, சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டன.
அனுக்கிரஹ பாஷணத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:
“தெனாலி சாஸ்திர பரீக்ஷா சபை விரிவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளுக்குப் புகழ்பெற்றது. இது சாஸ்திர சம்பிரதாயங்களை கற்றுத் தேர்ச்சி பெற ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் அறிஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். சாஸ்திரங்கள் தொடர்பான ஆய்வுகள் மனித மனதை தூய்மையாக்கி நற்செயல்களில் ஈடுபடச் செய்கின்றன.
நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வருவது இக்கால அறிஞர்களின் கடமையாகும். சாஸ்திரக் கல்வியின் நோக்கத்தையும், அதன் பாரம்பரிய வடிவத்தையும் உணர்ந்து பாதுகாக்கும் அறிஞர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.”
மேலும், சமூக நலனுக்கும் தர்மப் பிரச்சாரத்திற்கும் சாஸ்திர அறிவை பயன்படுத்துவதன் அவசியத்தையும் சுவாமிகள் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் காஞ்சி பல்கலைக்கழக வேந்தர் குடும்ப சாஸ்திரி, துணைவேந்தர் ஜி. ஸ்ரீநிவாசு, திருப்பதி தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் ராணி சதாசிவமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதவிற்பன்னர் ஸ்ரீ ராம்லால் சர்மா செய்திருந்தார்.