ஓஆர்எஸ் பெயரில் இனிப்பு பானங்களுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம்
ஓஆர்எஸ் முத்திரையுடன் கூடிய இனிப்பு பானங்களை கடைகளில் விற்க தடை என்றும், இருப்பில் உள்ள பானங்களையும் விற்க கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வயிற்றுப்போக்கால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதை கருத்தில் கொண்டு, உப்பு–சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) வழங்கப்படுகிறது. இதில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தனிப்பட்ட விகிதமான வேதிப்பொருட்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் ‘ஓஆர்எஸ்’ பெயரில் விற்பனை ஆகும் பானங்களில் இந்த அளவுகள் பின்பற்றப்படவில்லை.
இதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ ஆய்வு செய்து, ‘ஓஆர்எஸ்’ பெயரில் இனிப்பு பானங்களை விற்கக் கூடாது எனவும், விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எனவும் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவை உறுதி செய்து, “இது மக்களின் உடல் நலனைச் சார்ந்தது; சமரசம் செய்ய இயலாது” என்று தெரிவித்தார். இதனால், மருந்துக் கடைகளிலும், கடைகளிலும் ஏற்கெனவே உள்ள ஓஆர்எஸ் பெயரில் உள்ள பானங்களையும் விற்பனை செய்ய தடை தொடர்கிறது