கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆரம்பம் – நவம்பர் 12-இல் தேரோட்டம்
கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற நவம்பர் 12-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கான கால் நாட்டு நிகழ்ச்சி அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோயில் ரதவீதிகளில் கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்து, காலை 5.30 மணிக்கு அம்மன் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ உட்பட பல பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் காலை பல்லக்கில் மற்றும் மாலை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார். நவம்பர் 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் இடம்பெற உள்ளது. அப்போது அம்மன் திருத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் செய்கிறார்.
நவம்பர் 14-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அம்மன் தபசு தரிசனம் வழங்கவும், அதே தினம் மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பூவனநாதராக அம்மனுக்கு காட்சி தரும் வைபவமும் நடைபெறும். நவம்பர் 15-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மு. வள்ளிநாயகம், கோயில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிக்காரர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.