தயாரிப்பாளர் புகாரால் சிக்கலில் ‘ஹனுமான்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா
‘ஹனுமான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குநர் பிரசாந்த் வர்மா தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி, அவர்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிகாரப்பூர்வ புகார் செய்துள்ளார்.
தேஜா நடித்த ‘ஹனுமான்’ படம் வசூல் மற்றும் விமர்சனம் இரண்டிலும் மிகப்பெரிய வெற்றி கண்டது. உலகளவில் 300 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. இப்படக்குழுவில் இருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையே தற்போது கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
நிரஞ்சன் ரெட்டி அளித்த புகாரில், பிரசாந்த் வர்மா ‘ஜெய் ஹனுமான்’, ‘மஹாகாளி’ உள்ளிட்ட பல திட்டங்களுக்கு முன்கூட்டியே பணம் பெற்றபோதும், படப்பணியை தொடங்கவில்லை என்றும், இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த புகார் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விஷயம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலாக பிரசாந்த் வர்மா விளக்கமளித்துள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்கள் உண்மை நிலையை அறியாமல் செய்திகளை வெளியிடுகின்றன என்றும், தன் மீது வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் கூறியுள்ளார். தனது பக்கம் அனைத்து விளக்கங்களையும் ஏற்கனவே வழங்கியுள்ளேன், உண்மை விரைவில் வெளிப்படும் வரை காத்திருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.