சேம் கரணின் அதிரடி வீண் — மழையால் ரத்து ஆன முதல் டி20
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி நேற்று (அக்.18) கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டர் சேம் கரண் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசினார். குறிப்பாக, ஜேக்கப் டஃபி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 19 ரன்கள் அடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதேபோல், கேப்டன் ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 29 ரன்களும், ஹாரி புரூக் 14 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிந்ததும் திடீரென மழை பெய்தது. மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத சூழ்நிலை உருவாகி, நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்ததாக அறிவித்தனர்.
அதனால் சேம் கரணின் அதிரடி இன்னிங்ஸ் வீணானது. தொடரின் இரண்டாவது டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.