மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.77,000 கோடியை வெளியே எடுத்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அவர்கள் மீண்டும் முதலீட்டை அதிகரித்து ரூ.14,610 கோடி செலுத்தியுள்ளனர்.
எஃப்பிஐ (Foreign Portfolio Investors) எனப்படும் அன்னிய முதலீட்டாளர்கள், பல பொருளாதார காரணங்களால் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்திய சந்தையில் இருந்து பெரிய அளவில் பணத்தை திரும்பப் பெற்றனர். ஜூலையில் ரூ.17,700 கோடி, ஆகஸ்டில் ரூ.34,990 கோடி, செப்டம்பரில் ரூ.23,885 கோடி என மொத்தம் ரூ.77,000 கோடி வெளியேறியது.
இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் லாபம் மற்றும் செயல்திறன் மேம்பட்டு வருவது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைப்பார் என்ற நம்பிக்கை, மேலும் அமெரிக்கா–இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை சாதகமாக முன்னேறுவது போன்ற காரணங்களால் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, கடந்த அக்டோபரில் அவர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தையில் ரூ.14,610 கோடி முதலீடு செய்துள்ளனர். இருந்தாலும், 2025ஆம் ஆண்டில் இதுவரை எஃப்பிஐக்கள் மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடியை இந்திய பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.