பிஹாரில் மீனவர்களுடன் குளத்தில் இறங்கி மீன் பிடித்த ராகுல் காந்தி – பிரச்சாரத்தில் வித்தியாசம்!
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே, பெகுசராயில் உள்ள மீனவர்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்வலை வீசி மீன் பிடிக்கும் அனுபவத்தை பெற்றார் காங்கிரஸ் தலைவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
விஐபி கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளரான முகேஷ் சாஹ்னியுடன் சேர்ந்து குளத்திற்கு படகில் சென்ற ராகுல் காந்தி, பின்னர் தண்ணீரில் இறங்கி மீனவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுடன் போஸ் கொடுத்து மகிழ்ந்தார். வெள்ளை டி-ஷர்ட், கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர், குளத்தில் நேரடியாக குதித்தது அங்கிருந்த மீனவர்களையும், பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி,
“பெகுசராய் மீனவர் சமூகத்தினரை சந்தித்தது மகிழ்ச்சி. அவர்கள் செய்யும் வேலை சுவாரஸ்யமானதுதான், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பல. அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் ஊக்கமளிக்கிறது. மீனவர்களின் உரிமையும் மரியாதையும் காக்க நான் எப்போதும் அவர்களுடன் இருப்பேன்”
என்றார்.
காங்கிரஸ் கட்சியும் எக்ஸில் பதிவு வெளியிட்டு, ராகுல் காந்தி மீனவர்களுடன் பணிநிலையைப் பற்றி பேசினார் என தெரிவித்தது. மேலும், பிஹாரில் மகா கூட்டணி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூறியது:
✅ வேலை இல்லாத காலத்தில் மீனவ குடும்பத்திற்கு ரூ.5,000 உதவி
✅ மீன்வள காப்பீடு & சந்தை வசதிகள்
✅ ஒவ்வொரு தொகுதியிலும் மீன் சந்தை, பயிற்சி மையம், மானியத் திட்டங்கள்
✅ ஆறுகள், குளங்கள் புதுப்பிக்கும் திட்டம்