மகளிர் உலகக் கோப்பை இறுதி: தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு – இந்தியா தன்னம்பிக்கையுடன் களத்தில்
நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் திறமையான பேட்டிங் ஆற்றியுள்ளனர்.
மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
ஓப்பனர்களான ஷபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா இணைப்பு இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை தந்தது. முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் கூட்டணியை அமைத்தனர். ஆரம்ப 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் சேர்த்த இந்தியா, பின்னர் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு அழுத்தத்தைக் கண்டது.
ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்துப் பிரிந்தார். பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் ஷபாலி 62 ரன்கள் சேர்த்தார். 78 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஷபாலி அசத்தினார். ஜெமிமா (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) விரைவில் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் தீப்தி சர்மா நிலை தக்கவைத்து உறுதியான இன்னிங்ஸ் ஆடினார். ரிச்சா கோஷ் (24 பந்துகளில் 34) உடன் 47 ரன்கள் கூட்டணி அமைத்தார். தீப்தி 58 ரன்கள் எடுத்தார். ராதா யாதவ் 3 ரன்களில் இருந்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு 50 ஓவர்களில் 299 ரன்கள் என்ற கணிசமான இலக்கு வைக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் அயபோங்கா காக்கா 3 விக்கெட், லாபா, குளோ டிரையான், நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் 298 ரன்கள் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 2022-ல் ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்தது முதல் இடத்தில் உள்ளது.
இந்த தொடரில் இதுவரை ரன்களைத் துரத்தும் ஆட்டங்களில் தோல்வி காணாத தென் ஆப்பிரிக்கா, இப்போது ஓவருக்கு 5.98 ரன்கள் சராசரியில் இலக்கை நோக்கி பாய்கிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பீல்டிங் மற்றும் முக்கிய விக்கெட்டுகள் – லாரா வோல்வார்ட், குளோ டிரையான், நடின் டி கிளர்க் ஆகியோர் — வெற்றிக்கான டிசைடிங் பாயிண்ட் என கருதப்படுகிறது.