பிரபல ஹிந்தி டி.வி. நடிகை — இப்போது இமயமலை குகையில் சன்னியாச வாழ்க்கை
ஒருகாலத்தில் ஹிந்தி டி.வி. உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்த நூபுர் அலங்கார், தற்போது எல்லாவற்றையும் விட்டு ஆன்மீகப் பாதையில் பயணிக்கிறார். இமயமலையின் குகைகள், அடர்ந்த காடுகள் மற்றும் ஓரங்கட்டிய ஆசிரமங்களில் அமைதியான, மிக எளிய வாழ்க்கையையே தேர்வு செய்துள்ளார்.
155-க்கும் மேற்பட்ட தொடர்களில் (அதில் சக்திமான் உட்பட) நடித்துப் புகழ் பெற்றவர் நூபுர். தன்னுடைய சேமிப்புகளைப் பதுக்கியிருந்த பிஎம்சி வங்கி முறைகேடு காரணமாக 2019-ல் மூடப்பட்டதால், பணத்தைப் பெற முடியாத நிலையில் அவர் நிதி சிக்கலில் சிக்கினார். இதனுடன், தாய் மற்றும் சகோதரி தொடர்ந்து மரணம் அடைந்தது அவரை மனரீதியாக சோர்வடையச் செய்தது. உலக வாழ்க்கையால் விரக்தி அடைந்த அவர் ஆன்மீகத்தில் முழுமையாக மூழ்க முடிவு செய்தார்.
உறவினர்களின் சம்மதத்துடன் சன்னியாச வாழ்க்கையைத் தொடங்கிய நூபுர் தனது பெயரை “பீதாம்பர மா” என மாற்றிக்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்து தியானத்தில் நேரத்தை செலவிடுகிறார். கடும் குளிர், உடல் நலக் குறைகள், விலங்குகளின் தொல்லை போன்ற சவால்களையும் மீறி வாழ்ந்து வருகிறார்.
அவர் சொந்தப் பொருட்களாக வெறும் 5 செட் உடைகளை மட்டுமே வைத்திருக்கிறார்; ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் வழங்கும் ஆடைகளை பயன்படுத்துகிறார். தினசரி தேவைகளுக்கு மற்றவர்களிடம் யாசகம் செய்து, அதைத் தெய்வத்திற்கும் குருவிற்கும் அர்ப்பணிக்கிறார்.
நூபுர் கூறும்போது,
“ஆடம்பரமில்லாத வாழ்க்கையை நான் விரும்பினேன். இயற்கையுடன் கலந்த வாழ்வு எனக்கு மன அமைதியையும் தெளிவையும் அளிக்கிறது. யாசகம் செய்ததால் அகங்காரம் நீங்கியுள்ளது. கடலில் தண்ணீர் சேர்வது போல், நாமும் கடைசியில் தெய்வத்தில் இணைவதே வாழ்க்கையின் பொருள்” எனத் தெரிவித்துள்ளார்.