தங்கப் பஸ்மா இனிப்பு தீபாவளி ஹிட்டாகும் – ஒரு கிலோ விலை ரூ.1.11 லட்சம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடையில், இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள “தங்கப் பஸ்மா இனிப்பு” விலை ஒரு கிலோக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் என வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜெய்ப்பூர் நகரின் ஒரு பிரபல இனிப்புக் கடை வித்தியாசமான மற்றும் விலை உயர்ந்த இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது “ஸ்வர்ண பஸ்மா” அல்லது “ஸ்வர்ண பிரசாதம்” எனப்படும் இனிப்பு.
இந்த இனிப்பு 24 கேரட் தங்கப் பஸ்மா (உண்ணக்கூடிய தங்கத் தூள்) கொண்டு தயாரிக்கப்பட்டது. அதனால் இதற்கு “ஸ்வர்ண பிரசாதம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு கிலோவின் விலை ரூ. 1,11,000, மேலும் ஒரு துண்டின் விலை மட்டும் ரூ. 3,000 ஆகும்.
இனிப்பு நகை வடிவில் வடிவமைக்கப்பட்டு, நகைப்பெட்டியைப் போல வடிவமைக்கப்பட்ட அழகான பெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு பணக்கார வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவுகிறது.
இதுகுறித்து கடையின் உரிமையாளரான அஞ்சலி ஜெயின் தெரிவித்ததாவது:
“இந்த ஸ்வர்ண பஸ்மா இனிப்பு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தோற்றத்தில் நகையைப் போன்றதாய் இருந்தாலும், ஆயுர்வேத அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படாது,” என்றார்.
அத்துடன், கடையில் விற்பனை செய்யப்படும் மற்ற விலை உயர்ந்த இனிப்புகளாக
- ஸ்வர்ண பஸ்மா பாரத் இனிப்பு – கிலோவுக்கு ₹85,000
- சண்டி பஸ்மா பாரத் இனிப்பு – கிலோவுக்கு ₹58,000
எனவும் கூறினார்.
இந்த “தங்க இனிப்பு” பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.