வாஷி கலக்கம்: 3-வது டி20யில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. இறுதியில் வந்த வாஷிங்டன் சுந்தர் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் மழையெழுப்பி இந்தியாவை வெற்றிக்குச் சென்றார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி தற்போது ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து; இரண்டாவது ஆட்டத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், மூன்றாவது ஆட்டம் இன்று ஹோபார்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 74, ஸ்டாய்னிஸ் 65, மேத்யூ ஷார்ட் 26 ரன்கள் சேர்த்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்ரவர்த்தி 2, ஷிவம் துபே ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
187 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய இந்தியா அமைதியாக ரன்களை சேர்த்தது. அபிஷேக் சர்மா 25, ஷுப்மன் கில் 15, சூர்யகுமார் யாதவ் 24, அக்சர் படேல் 17, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) அடித்து இந்தியாவை வெற்றிக்குத் தள்ளினார். ஜிதேஷ் சர்மா 22 ரன்கள் உதவினார்.
18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என சமமாக உள்ளன. அடுத்த போட்டி வரும் வியாழக்கிழமை கோல்ட் கோஸ்டில் நடைபெறும்.