வீட்டாருக்கு தெரியாமல் ‘தாரணி’ படத்தை இயக்கிய இயக்குநர்!
அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாரணி’ படத்தில், மாரி கதாநாயகனாகவும், அபர்ணா மற்றும் விமலா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மனோன்மணி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தயாரித்துள்ள இப்படத்தில், ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலரும் நடிப்பில் இணைந்துள்ளனர். காயத்ரி குருநாத் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவை வெங்கடேஷ் மாவெரிக் மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ஆனந்த் கூறும்போது, “புதிய முகங்களை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்புவரை, நான் ஒரு படத்தை இயக்குகிறேன் என்பதை என் வீட்டாருக்கு கூட தெரியாது. ஆபீசுக்கு போகிறேன் என்று சொல்லி, திரை உலகப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒரு சூழ்நிலையால் தான் இது வீட்டில் வெளிச்சத்துக்கு வந்தது.
திரை உலகில் முன்னேறுவதற்காக ஒரு பெண் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது, சிலரால் அவள் சந்திக்க வேண்டிய சிக்கல்கள் என்ன என்பதையே இப்படம் பேசுகிறது. ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இது அமையும். இதற்குப் பின் ‘என் திரை’ எனும் படத்தை இயக்க உள்ளேன்” என்றார். படக்குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.