அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் – இந்திய வம்சாவளி சிஇஓவின் மோசடி வெளிச்சம்
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சிஇஓ பாங்கிம் பிரம்பட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனம் ப்ளாக் ராக் அதன் துணை நிறுவனம் HPS மூலமாக, பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் எனும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நடத்தும் பிரம்பட்டுக்கு 2020 முதல் 2024 வரை பெரும் அளவில் கடன் வழங்கியுள்ளது.
ஆனால், அந்தப் பெரிய தொகையை தொழில்வளர்ச்சிக்காக இல்லாமல், இந்தியா மற்றும் மொரிசியஸில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியிருந்தது பின்னர் தெரியவந்தது. சில சந்தேகமான இ-மெயில் மாற்றங்களை கவனித்த HPS ஊழியரின் புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணை நடக்கும் போது நிறுவன பதிவுகள், வாடிக்கையாளர் விவரங்கள், ஒப்பந்தங்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டது. கடனுக்கான அடமான சொத்துக்களும் விற்கப்பட்டு பணமாக மாற்றப்பட்டு, வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டன.
அதிகாரிகள் விளக்கம் கோரியபோது “கவலைப்பட வேண்டாம்; கடனைத் திருப்பிச் செலுத்துவோம்” என பதிலளித்த பிரம்பட் பின்னர் எந்த விளக்கமும் தராமல் தப்பிச் சென்றார். நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்டன.
500 மில்லியன் டாலருக்கும் மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுள்ள பிரம்பட் தற்போது இந்தியாவில் மறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.