சீனாவில் புதிய ட்ரெண்ட்: ‘ஹாட்ட்பாட்’ ஸ்பா குளியல்
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம், ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பாரம்பரிய சீன மரபு மருத்துவ முறையைக் கருத்தில் கொண்டு ‘ஹாட்பாட் குளியல்’ எனும் புதிய அனுபவம் உருவாக்கப்பட்டுள்ளது.
5 மீட்டர் பரப்பளவுடைய வட்ட வடிவப் பெரிய தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது—ஒன்று சிவப்பு, மற்றொன்று வெள்ளை நிறம். சிவப்பு பகுதியின் நீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் போன்றவை மிதக்கின்றன. வெள்ளை பகுதி பாலில் நிரப்பப்பட்டு, அதில் சிவப்பு பேரிச்சம்பழம் மற்றும் பெர்ரி பழங்கள் விடப்பட்டுள்ளன.
சூப் போல சூடு வாய்ந்த இந்தக் குளத்தில் நீராடும் மக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றனர் என்ற செய்தியை சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது. இத்தகைய ஹாட்பாட் குளியலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு முறை குளிப்பதற்கான கட்டணம் சுமார் ரூ.2,100 ஆகும்.
இந்த ஹாட்பாட் குளியலுக்குப் பொறுப்பான ஊழியர் ஒருவர் கூறுகையில்:
“சிவப்பு நிறத்திலான நீர் ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தினமும் புதிய ரோஜா இதழ்களை சேர்க்குகிறோம். மேலும் பயன்படுத்தப்படும் மிளகாய் லேசான காரம் கொண்டது; இது குளிப்பவர்களின் ரத்த ஓட்டத்தை தூண்டும். வெள்ளை பிரிவிலுள்ள பால், சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது,” என்று தெரிவித்தார்.