சூடானில் வன்முறை அதிகரிப்பு: உயிர் தப்ப முயலும் மக்கள் — நிலைமை மோசம்
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை சக்திவாய்ந்த துணை ராணுவ அமைப்பு ஆர்எஸ்எஃப் கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கையின் பின் அங்கு பரவலான படுகொலை, தாக்குதல், பாலியல் வன்முறை, கொள்ளை போன்ற சம்பவங்கள் பெருகி, மக்கள் உயிர் பாதுகாப்புக்காக அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அல்-ஃபாஷரில் உள்ள 1.77 லட்சம் மக்களின் நிலைமை தெளிவாக தெரியவில்லை; 65,000-க்கும் மேற்பட்டோர் நகரை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால் உண்மை நிலையை அறிய முடியாத சூழல் நிலவுகிறது.
யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்ததில், அக்டோபர் 27 முதல் 31 வரை 31 இடங்களில் கூட்டக்கல்லறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிய மக்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஃப் நடவடிக்கையை ஐ.நா உட்பட பல சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன.
மோதலின் பின்னணி
2019-ல் மக்களின் போராட்டத்தால் சர்வாதிகார ஆட்சியாளர் ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கபட்டார். அதன்பின் ஜனநாயக அரசு அமைக்க முயற்சி நடந்தாலும், மீண்டும் ராணுவம் அதிகாரத்தைப் பிடித்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.
ராணுவத்தில் இருந்த பிரிவான ஆர்எஸ்எஃப், ராணுவத்துக்கே எதிராக நின்றதால், 2023 ஏப்ரல் முதல் இருதரப்பும் ரத்தம் சிந்தும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மேற்கு சூடானின் பெரும்பகுதி ஆர்எஸ்எஃப் கட்டுப்பாட்டில் உள்ளது.
உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். தற்போது நிலைமை மேலும் மோசமடைந்து, மனிதாபிமான நெருக்கடி தீவிரமாகியுள்ளது.