“நகராட்சித் துறை மோசடி விவகாரத்தில் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” – கிருஷ்ணசாமி
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்கள் தொடர்பான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கான பொறுப்பை ஏற்று அந்த துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான தயாரிப்பில் ஒரு பகுதியாகவும், கிராம மக்களின் பிரச்சினைகளை அறியவும் கடந்த நான்கு மாதங்களாக தமிழக கிராமங்களை சுற்றிப் பார்த்து வருகிறேன்” என்றார்.
“திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செய்த பயணங்களில், கிராம மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. திருநெல்வேலியில் 60-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் வேளாண் தொழிலில் ஈடுபடும் 40 சதவீத தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு வைகை நதி நீர் வழங்கப்படவில்லை. குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மனித உரிமை மீறல். இதற்கான கண்டனமாக நவம்பர் 20-ஆம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்” என்றார்.
“சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கிறது. இருப்பினும், அது முழுமையாக வெளிப்படையாக இருக்க வேண்டும். எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.
“இன்றைய இளைஞர்கள் கடுமையாக படித்து அரசுப் பணியை நோக்கி பயணம் செய்கிறார்கள். ஆனால் பணம் பார்த்து வேலை வழங்கும் நிலை ஏற்பட்டால் அது நாட்டுக்கு பாதகம். நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறையால் டிஜிபிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்தத் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் இதற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
“அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் கவலைக்குரியது. எங்கள் கட்சி மாநாட்டிற்கு பின் தேர்தல் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்” என்றும் அவர் கூறினார்.