‘மஹாகாளி’ வேடத்தில் அதிரடியை காட்டிய பூமி ஷெட்டி
‘ஹனுமான்’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் வர்மா, தனது ‘பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ திட்டத்தின் கீழ் மொத்தம் ஐந்து படங்களை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும், ‘மஹாகாளி’, ‘சிம்பா’, ‘ஆதிரா’ போன்ற படங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூன்றாவது படமான ‘மஹாகாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படக் கதையை பிரசாந்த் வர்மா எழுதி இருக்கிறார். பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கும் இந்த படத்தை, ஆர்கேடி ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்காக ஆர்கே துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான மஹாகாளி வேடத்தில் பூமி ஷெட்டி தோன்றுகிறார். வித்தியாசமான மற்றும் தீவிரமான அந்த லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பூமி ஷெட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார். கன்னட திரைப்பட நடிகையான பூமி ஷெட்டி, ‘இக்கட்’ உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்திலும் நடித்துள்ளார்.
‘மஹாகாளி’ படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உருவாக்கப்பட்ட பெரிய செட்டில் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.