ஆந்திரா: கோயில் கூட்ட நெரிசல் விபத்து — 9 பேர் பலி, பலர் காயம்
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்; பலரும் காயமடைந்துள்ளனர்.
காசிபுக்கா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாட்டுக்கு இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். கூட்டம் அதிகரித்ததால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிக்கிய சில பக்தர்கள் மயங்கி கீழே விழுந்ததால் 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் இரங்கல்
இந்த துயர சம்பவத்துக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
“காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.
அதேபோல, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
அமைச்சர் லோகேஷ் பதில்
மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்:
“ஏகாதசி நாளில் நிகழ்ந்த இந்த துயர விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. சம்பவம் குறித்து அமைச்சர் அச்சன்நாயுடு, உள்ளூர் எம்எல்ஏ கவுது ஷிரிஷ் உள்ளிட்டோருடன் பேசிவிட்டேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.