ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனத் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நாட்டில் தற்போது உருவாகி உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நேரடியாக காரணம். பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சர்தார் வல்லபாய் படேலை மதிக்கிறவராக இருந்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து, இதை உள்மனத்திலிருந்தே வெளிப்படையாக கூறுகிறேன்” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
காந்திஜி படுகொலைக்கு பிறகு 1948-ல் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டதை நினைவூட்டினார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், ஜனசங்க தலைவர் ஷ்யாமபிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், காந்தி மரணத்திற்கு பிறகு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சி கொண்டதாகவும், இனிப்பு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர வேறு வழியில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபையின் செயல்பாடுகள் காந்திஜி படுகொலைக்குத் தள்ளிய சூழ்நிலையை உருவாக்கின எனவும் கார்கே மேற்கோள் காட்டினார். “காந்தியைக் கொன்ற குழுவே இப்போது காங்கிரஸைக் குறை கூறுகிறது. படேல் நாட்டை ஒருங்கிணைத்த தலைவர். அவரே அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பில் இணைக்க பங்காற்றினார்” என்றும் கூறினார்.
இதற்கு முன் குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலைக்கு மோடி அஞ்சலி செலுத்தினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த சாதனையைப் புகழ்ந்தார். மேலும் ஜம்மு-காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு எதிர்ப்பு தெரிவித்ததால் அது நடைபெறவில்லை என்பதையும் குற்றம் சாட்டினார்.