புரோ கபடி: இன்று டெல்லி – புனே மோதல்; சாம்பியன் யார்?
புரோ கபடி லீக் 12ஆம் சீசனின் பட்டப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் தபாங் டெல்லி மற்றும் புனேரி பல்தான் அணிகள் டெல்லியில் உள்ள தியாகராஜ் அரங்கில் இரவு 8 மணிக்கு நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது.
8ஆம் சீசனில் சாம்பியன் ஆன தபாங் டெல்லி, இந்த சீசன் லீக் கட்டத்தில் 2வது இடத்தில் இருந்தது. குவாலிபையர்–1ல் புனே அணிக்கு எதிரான ஆட்டம் 34–34 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற டை–பிரேக்கரில் 6–4 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் அஷு மாலிக் தலைமையில் முக்கிய தருணங்களை சிறப்பாக கையாள்ந்தது இவர்களின் பலமாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அஸ்லம் இனாம்தார் தலைமை ஏற்று, அஜய் தாக்கூர் பயிற்சியளித்த புனேரி பல்தான் இந்த சீசனில் லீக் ரவுண்டில் முதலிடம் பிடித்தது. குவாலிபையர்–1ல் தோல்வி அடைந்தாலும், குவாலிபையர்–2ல் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இடம்பிடித்தது.
இந்த சீசனில் டெல்லி மற்றும் புனே அணிகள் மூன்றுமுறை மோதியுள்ளன. மூன்றுமே சமனில் முடிந்து டை–பிரேக்கரில் தீர்க்கப்பட்டன. டெல்லி அணி அஷு மாலிக் ரெய்டுகளின் மீது நம்பிக்கை வைத்தது. மற்றுபுறம் புனே அணி கார்னர் டிஃபண்டர்களின் நிதானமான தடுப்பாட்டத்தால் வெற்றியைப் பெற்றது.
சொந்த மைதான ஆதரவுடன் விளையாடும் டெல்லிக்கு சற்று முன்னிலை இருப்பதாகக் கருதப்படுகிறது. ஃபசல் அட்ராச்சாலி, சௌரப் நந்தல், அஷு மாலிக் போன்ற வீரர்கள் உச்ச தரத்தில் விளையாடினால் டெல்லி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.