“எங்கள் தேர்தல் அறிக்கையை நகலெடுத்துள்ளனர்” — தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதையடுத்து, அதில் உள்ள வாக்குறுதிகள் மகா கூட்டணியின் அறிவிப்பில் இருந்து காப்பி செய்யப்பட்டவை என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நாங்கள் முன்பு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறிய போது, அதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இப்போது அவர்கள் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“20 ஆண்டுகளாக இந்த கூட்டணி ஆட்சி செய்தும் பிஹார் இன்னும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது. தொழிற்துறைகள் இல்லை, முதலீடுகள் வரவில்லை. மருத்துவக் கல்லூரிகள் அமைப்போம் என்று சொல்கிறார்கள், ஆனால் தற்போதைய மருத்துவமனைகளிலேயே மருத்துவர், செவிலியர்கள், மருந்துகள் பற்றாக்குறை. மக்கள் இப்போது உண்மையை புரிந்துள்ளனர்; இந்த முறை அவர்கள் மாற்றத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.”
243 தொகுதிகளுக்கான பிஹார் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.