ஆசியக் கோப்பை சர்ச்சை: ஐசிசி கூட்டத்தில் பேச பிசிசிஐ முடிவு
ஆசிய கோப்பை கோப்பை வழங்கல் விவகாரம் குறித்து வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் விவாதிக்க பிசிசிஐத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 28-ஆம் தேதி துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியனானது. போட்டிக்குப் பின் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பை பெற இந்திய அணி மறுத்ததால், அவர் கோப்பை வழங்காமல் எடுத்துச் சென்றார். இதனால் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து அக்டோபர் 22-ஆம் தேதி பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி, கோப்பை இந்திய அணிக்கு வழங்குமாறு வலியுறுத்தியது. ஆனால் இதுவரை பதிலும் நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது:
“ஆசியக் கோப்பை இன்னும் எங்கள் கைகளுக்கு வரவில்லை. இதைத் தொடர்பாக ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். பதில் இல்லை. அடுத்த சில நாட்களில் கோப்பை கிடைக்கும் என நம்புகிறோம். இல்லையெனில் நவம்பர் 4-ஆம் தேதி துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இந்த விவகாரத்தை முன்வைப்போம்” என்றார்.