அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான தானியங்கி பணி நீட்டிப்பு அனுமதி ரத்து
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022 கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சத்தவர்கள் சுமார் 48 லட்சம் பேர். இதில் 66% பேர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள், 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
வெளிநாட்டு குடியேற்றத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய நிலையில், தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தானியங்கிப் பணி நீட்டிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையால் அமெரிக்காவில் பல வித விசாக்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் அவர்களின் துணைகள் உட்பட ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிபந்தனைகள்
- வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி தங்களின் வேலை அனுமதி ஆவணங்களை (Employment Authorization Document) தவறாமல் புதுப்பிக்க வேண்டும்.
- ஆவணங்களை புதுப்பிக்காதவர்கள் பணி நீட்டிப்பு பெற முடியாது.
- வேலை அனுமதி முடிவதற்கு 180 நாட்களுக்கு முன்பே நீட்டிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
அமெரிக்க குடியுரிமை துறை இயக்குநர் ஜோசப் எட்லோ கூறுகையில்,
“வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே நீட்டிப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவில் வேலை செய்வது ஒரு வாய்ப்பு – உரிமை அல்ல” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், படிவம் I-765 சமர்ப்பித்தால் தானாகவே 540 நாள் பணி நீட்டிப்பு கிடைக்கும் நடைமுறையே இருந்தது.