“இந்திய மதிப்புகளை தைரியமாக பேணிய இயக்கம் ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி பாராட்டு
இந்திய பாரம்பரியத்தையும் ஆன்மீக மதிப்புகளையும் திடமாகக் காக்கும் இயக்கமே ஆரிய சமாஜம் எனவும், அதன் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னோடியான சிந்தனையாளர் என்றும், பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.
ஆரிய சமாஜம் நிறுவப்பட்டு 150 ஆண்டு நிறைவை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“இந்த அமைப்பு உருவான 150 ஆண்டுகள் ஒரு சமூகக் குழுவின் பயணமல்ல, மாறாக நமது தேசத்தின் வேத மரபு மற்றும் அடையாளத்துடன் இணைந்த முக்கியமான காலப் பயணம். இந்திய மதிப்புகளைப் பற்றி தடுமாறாமல் வெளிப்படையாக பேசும் அமைப்பு ஆரிய சமாஜம். சுவாமி தயானந்த சரஸ்வதி, காலத்தைக் கடந்து நோக்கிய பார்வையுடன் பெண்களை வலுப்படுத்த முக்கிய பங்களிப்பு செய்தவர்” என்றார்.
“இன்று இந்திய மகள்கள் போர் விமானங்களை ஓட்டுகிறார்கள், ட்ரோன்களை இயக்குகிறார்கள், அறிவியல் – தொழில்நுட்ப துறைகளில் உயர்ந்த நிலைகளில் உள்ளனர். சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இது பெண்கள் சக்திப்படுத்தலுக்கான சான்று,” என்றார் மோடி.
கடந்த ஆண்டு குஜராத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது என்றும், அவரது 200வது ஜெயந்தியை இரண்டு ஆண்டுகள் தொடரும் அறிவு-யாகமாகக் கொண்டாட முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில், தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆரிய சமாஜத்தின் 150வது ஆண்டையும் நினைவுகூரும் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.