2027 உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து நேரடியாக தகுதி பெறுமா? — கடின சவால்கள்!
பல ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டின் பெரிய சக்தியாக திகழ்ந்த இங்கிலாந்து, இப்போது முன்னெப்போதும் இல்லாத சிக்கல் நிலையை சந்தித்து வருகிறது. 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு அவர்கள் தானாகவே தகுதி பெறும் நிலை தற்போது சந்தேகமாகியுள்ளது. காரணம் — ஒருநாள் தரவரிசையில் தற்போது இங்கிலாந்து 8வது இடத்தில் உள்ளது.
2027 உலகக்கோப்பைக்கு முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறுகின்றன. இங்கிலாந்து மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறத் தவறினால், மார்ச் 31, 2027 இல் 9வது இடத்தில் சென்றுவிடும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், தகுதிச் சுற்றுகளில் விளையாட வேண்டிய கட்டாயம் வரும்.
கடந்த இரு ஆண்டுகளில் இங்கிலாந்து பெற்ற தொடர்ச்சியான தோல்விகளே இந்நிலையை உருவாக்கியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றிடம் பெரும் தோல்விகளை சந்தித்தனர். அண்மையில் நியூஸிலாந்து தொடரையும் இழந்தனர். வீட்டில் வெஸ்ட் இண்டீஸை வென்றதே ஒரே ஆறுதல்.
மேலும் சிக்கல் என்னவெனில், உலகக்கோப்பை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெறுகின்றன. இதில் தென் ஆப்பிரிக்கா தற்போது 6வது இடத்தில் இருப்பதும் சூழ்நிலையை இன்னும் கடினமாக்குகிறது.
இங்கிலாந்துக்கு இன்னும் 13 மாதங்களில் மொத்தம் 20 ஓடிஐ போட்டிகள் மட்டுமே உள்ளன. இதில் 6 போட்டிகள் தங்கள் நாட்டில் — அதுவும் இந்தியா, இலங்கை போன்ற பலமான அணிகளை எதிர்த்து. மீதம் 14 போட்டிகள் அந்நிய மண்ணில்; இங்கிலாந்து வெளியூர் பிச்சுகளில் பொதுவாக பலவீனமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. எதிரிகள் — இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்.
மேலும், இங்கிலாந்துக்கு கீழே இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கான போட்டிகள் பெரும்பாலும் வீட்டிலேயே நடக்கின்றன. அதனால் அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்; தரவரிசையிலும் முன்னேறக்கூடும்.
பாச்பால், பூஸ்பால் என்று பெரிய பேச்சில் தங்களை உலகின் மிகச்சிறந்த ‘அட்டகாச கிரிக்கெட்’ அணி என விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து, தற்போது தொடர்ச்சியான தோல்விகளால் கடுமையான சோதனையை எதிர்கொள்கிறது.
இதனால் இங்கிலாந்து அணியின் முடிவு எடுக்கும் குழுவான ராபர்ட் கீ, மெக்கல்லம், ஹாரி புரூக் உள்ளிட்டோர் மிகப்பெரிய சவாலைச் சந்திக்கின்றனர் — 2027 உலகக்கோப்பை டிக்கெட்டை பாதுகாப்பது!