முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு தடை செய்தார் – பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் படேல், நாடு முழுவதும் இருந்த சமஸ்தானங்களை இணைத்தது போல், முழுக் காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் அக்காலத்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சர்தார் படேலின் பிறந்தநாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பகுதியாக, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ‘ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி’யில் மலர் அஞ்சலி செலுத்தினார். அங்கு நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். இதில் பல மாநில போலீஸ் படைகளும், துணை ராணுவப் படைகளும் பங்கேற்றன. சிறப்பாக, அனைத்து படைப்பிரிவுகளுக்கும் பெண்கள் அதிகாரிகள் தலைமை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய மோடி,
“வரலாற்றை எழுதுவது முக்கியமல்ல, வரலாற்றை உருவாக்குவதே முக்கியம்” என்று படேல் நம்பினார் என்றார். மேலும்,
“சுதந்திரத்திற்குப் பிறகு 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்தது படேல் செய்த அதிசயப் பணியாகும். ஆனால் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் சேர்க்க அவரது முயற்சியை நேரு நிறைவேற்ற விடவில்லை. இதன் விளைவாக காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு, தனிக் கொடி எனப் பிரிவினை உருவானது. இந்தத் தவறின் பாரத்தை நாடு பல தசாப்தங்களாக சுமந்து வந்தது,” என்றார்.
தேச சேவையே மிகுந்த மகிழ்ச்சி என படேல் கூறியதை நினைவுகூர்ந்த மோடி,
“நாம் தேசத்திற்காக உழைப்பதே பெரிய மரியாதையும் மகிழ்ச்சியும்,” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இந்தியாவின் பன்முக கலாச்சார மரபை வெளிப்படுத்தினர். ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிச்சலை வெளிப்படுத்திய CRPF, BSF வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.