‘பைசன்’ படத்திற்கு மணிரத்னம் பாராட்டு: “இந்தக் குரல் மிக முக்கியம்”
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் பாராட்டு பெற்று வரும் நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்னமும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படம் பார்த்த பிறகு, மாரி செல்வராஜுக்கு நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பி பாராட்டியுள்ளார் மணிரத்னம். அந்த செய்தியை மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், மணிரத்னம் கூறியதாவது:
“வணக்கம் மாரி, இப்போது தான் உங்கள் படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் நீங்களே ‘பைசன்’. உங்கள் படைப்பைக் கண்டு பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் குரல் இந்த காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.”
இதற்கு நன்றியுடன் பதிலளித்த மாரி செல்வராஜ்,
“‘பரியேறும் பெருமாள்’ முதல் என் படங்கள் அனைத்தையும் கவனித்து, பாராட்டி, உற்சாகம் அளித்து வருவதற்கு என்றும் நான் நன்றிகொள்கிறேன். பேரன்பும் மரியாதையும் சார்,” என்று பகிர்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் தற்போது உலகளவில் ரூ.60 கோடி வசூலை கடந்துள்ளது.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களிடமிருந்தும் படம் பாராட்டுகளை பெற்றுள்ளது.