ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருமலை எங்கும் பக்தி சூழ்ந்த நிலையில், வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று ஆன்மிக ரீதியாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே உற்சவ மூர்த்திகளான மலையப்பர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் நடந்தன. அதற்கு முன்னர் 9 டன் மலர்களை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் சமர்ப்பித்தனர்.
இந்தநிகழ்ச்சி குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக ஆணையர் அனில்குமார் சிங்கால் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
பிரம்மோற்சவம் முடிந்த பின் கார்த்திகை மாதத்தில், பெருமாளின் திருவோணம் நட்சத்திர நாளில் புஷ்ப யாகம் நடத்துவது பழமையான ஐதீகம். 15ஆம் நூற்றாண்டு வரை அரசர்கள் இந்த யாகத்தை செய்துள்ளனர். பின்னர் இடைநிறுத்தப்பட்ட இந்த யாகம், 1980 முதல் திருப்பதி தேவஸ்தானத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டைய யாகத்தில் 16 வகை பூக்கள், 6 வகை துளசி மற்றும் தவனம் உள்ளிட்ட இலைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் 5 டன் மலர்கள் தமிழகத்திலிருந்தும், மிச்ச 4 டன் மலர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பக்தர்களின் நன்கொடையாக வந்தவையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.