ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடைகள்: இந்தியா பரிசீலனையில் – வெளிவிவகார அமைச்சகம்
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய தடைகளை இந்தியா கவனமாக ஆய்வு செய்து வருவதாக வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
டெல்லியில் ஊடகத்தினரிடம் பேசிய அவர்,
“ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள புதிய தடைகளை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம். சர்வதேச சூழ்நிலை மற்றும் சந்தை நிலையை கருத்தில் கொண்டு தான் இந்தியா எப்போதும் முடிவெடுக்கிறது. 140 கோடி மக்களின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு, மலிவான விலையில் எரிசக்தி பெறுவது எங்களின் தொடர்ந்த நிலைப்பாடு,” என்றார்.
ஈரானின் சபாஹர் துறைமுகத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்து பேசும்போது,
“இந்தியாவுக்கு 6 மாத விலக்கு வழங்கப்பட்டுள்ளது; அமெரிக்காவுடன் தொடர்புடைய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.
மேலும், சீனாவில் இருந்து அரிய பூமித்தாதுப் பொருட்களை சில இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும், அமெரிக்கா–சீனா பேச்சுவார்த்தையின் விளைவுகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆப்கனிஸ்தானுக்கு இந்தியாவின் ஆதரவு குறித்து அவர்,
“நீர்மின் திட்டங்கள் மற்றும் நீர்மூல மேலாண்மையில் ஆப்கனை தொடர்ந்து ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது. சல்மா அணை உள்ளிட்ட பல திட்டங்களில் இரு நாடுகளும் முன்னர் இணைந்து செயல்பட்டுள்ளன,” என்றார்.
பாகிஸ்தானை நோக்கி அவர் குறிப்பிட்டதாவது,
“ஆப்கனிஸ்தானின் இறையாண்மையை மதிக்க பாகிஸ்தான் தயங்குகிறது. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை உண்மையில் மன்னிக்க முடியாது. இந்தியா எப்போதும் ஆப்கனிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு அளிக்கிறது,” என்று கூறினார்.