சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி 10% குறைப்பு: ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் அறிவிப்பு
தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நேற்று முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 10% குறைக்கும் முடிவை ட்ரம்ப் அறிவித்தார்.
ட்ரம்ப் பேசியபோது,
“ஜி ஜின்பிங் உடன் நடந்த கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் விளைவாக சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் நல்ல முன்னேற்றமாக இருக்கும்,” என்றார்.
மேலும் அவர்,
“சீனா அரிய மண் தாதுக்கள் (Rare Earth Minerals) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவும், அமெரிக்க சோயாபீன்களை அதிக அளவில் வாங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் நான் சீனாவுக்கு பயணம் செய்கிறேன்; அதன் பின்னர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருவார்,” என்றார்.
ட்ரம்ப் மேலும் கூறுகையில்,
“தைவான் தொடர்பாக எந்த விவாதமும் நடத்தவில்லை. ஆனால் உக்ரைன் நிலைமை தொடர்பாக விரிவாக பேசினோம் மற்றும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தோம். அதிநவீன கணினி சிப் ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது; இதற்காக NVIDIA நிறுவன பிரதிநிதிகள் சீன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சீனாவுடன் விரைவில் ஒரு உடன்பாடு உருவாகும்,” எனக் கூறினார்.
இந்த சந்திப்பில் வர்த்தக பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து பல உடன்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் டிக்டாக் உரிமை விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. “டிக்டாக் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றிணைந்து பணியாற்றும்,” என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.