“மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் அவமதிக்கப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுகின்றனர்” — சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு
பிஹாரை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் அவமதிக்கப்பட்டாலும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு ஆதரவாக செயலில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் மற்றும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவரான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டினார்.
சாப்ராவில் நடைபெற்ற பிஹார் சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
“நான் அரசியலில் வந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பிஹாரிகள் மற்ற மாநிலங்களில் சந்தித்த அவமதிப்புகள். ‘பிஹாரி’ என்ற சொல்லையே ஒருகட்டத்தில் அவமானமாக மாற்றிவிட்டார்கள். பஞ்சாபில், காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் இருக்கையில், பிஹாரிகளை மாநிலத்திலே நுழைய வேண்டாம் என மிரட்டப்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார். அதை காங்கிரஸ் உறுப்பினர்கள் கைதட்டி ஆதரித்தனர். தெலங்கானாவிலும் அவர்கள் பிஹாரிகளை அதே முறையில் நடத்துகிறார்கள்,” என்றார்.
அவர் தொடர்ந்து,
“இப்படி நடந்து கொண்டு காங்கிரஸ் இப்போது பிஹாரில் வந்து வாக்கு கேட்பது எப்படி சாத்தியம்? பிஹாரியை அவமதிக்கும் போது காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கு வந்து மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். இதை மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்,” எனக் கூறினார்.
இன்னும்,
“இந்தத் தேர்தல் பிஹாருக்கு ஒரு பொற்காலத்தைத் தொடங்கிவைக்கும். நவம்பர் 14க்கு பிறகு ஏற்படும் பதவியேற்பு விழா, புதிய அரசின் பொறுப்பேற்பு மட்டுமல்ல, வளர்ச்சிக்கான புதிய பாதையை அமைக்கும் தருணமாக இருக்கும்,” என்று சிராக் பாஸ்வான் குறிப்பிட்டார்.