ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு இந்திய அணி!
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நவி மும்பையின் டி.ஒய். பாடீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்ஸி ஃபீல்ட் 119, எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தனர்.
339 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியா சிறப்பாக துரத்தியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா (10) மற்றும் ஸ்மிருதி மந்தனா (24) விரைவில் வெளியேறிய நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 167 ரன்கள் சேர்ந்த முக்கிய கூட்டணியை அமைத்தனர். ஹர்மன்பிரீத் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா 134 பந்துகளில் 127 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார். தீப்தி சர்மா 24, ரிச்சா கோஷ் 26 ரன்கள் சேர்த்தனர்.
48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை துரத்தி வென்ற சாதனையை இந்தியா படைத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது பெற்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக உலகக் கோப்பை சாம்பியனாக திகழும்.