பாகிஸ்தானில் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தாக்குதலுக்கு TTP பொறுப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லை அருகிலுள்ள ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்ற தகவலை தொடர்ந்து, லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் (39) தலைமையிலான படை அங்கு சென்றது. அப்போது இடம் பெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 19 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேவேளை, கர்னல் ஆரிப், மேஜர் தய்யப் ரஹத் உட்பட 11 ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்து, “நம் வீரர்கள் செய்த தியாகம் வீணாகாது. பயங்கரவாதிகளின் திட்டங்களை முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தினார்.
பாகிஸ்தானில் தற்போதைய அரசை கவிழ்த்து, கடுமையான இஸ்லாமிய சட்டத்தால் இயங்கும் ஆட்சியை அமைக்க தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. இவ்வமைப்புக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதரவளிக்கின்றனர் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டினாலும், ஆப்கன் அரசு அதை மறுத்து வருகிறது.