சர்தார் படேல் பிறந்த நாளில் குஜராத் சிலை முன் சிறப்பு அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 31 அன்று ‘ஒற்றுமையின் சிலை’ முன்பாக குடியரசு தின அணிவகுப்பை ஒத்த வகையில் பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்தியாவின் ஒருங்கிணைப்பில் சர்தார் படேல் மிகப்பெரிய பங்கை வகித்தார். 2014 முதல் அவரது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட படேல் சிலை — உலகின் உயரமான சிலை — 2018ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது” என்றார்.
அவர் மேலும், “இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அக்டோபர் 31-ம் தேதியும் இவ்வாறான விசேஷ அணிவகுப்பு நடத்தப்படும். நாளைய விழாவில் காலை 7.55 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் மாநில காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெறும்” என தெரிவித்தார்.
அணிவகுப்பில் மத்திய ஆயுதப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் தங்களது ஒழுக்கம், வீரத்தையும் திறமையையும் காண்பிக்க உள்ளனர்.
மேலும், “நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் #RunForUnity நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமைக்காக உறுதிமொழி ஏற்க ஏற்பாடாகியுள்ளது. நவம்பர் 1 முதல் பீர்சா முண்டா பிறந்த தினமான நவம்பர் 15 வரை ஏக்தா நகரில் சிறப்பு தேசிய விழாக்கள் நடைபெறும். இறுதி நாளில் பழங்குடியினர் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடையும்” என்றார்.
இந்த அணிவகுப்பில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த படையினர் பங்கேற்கின்றனர். ஆபரேஷன் சிந்தூரில் பதக்கம் பெற்ற 16 BSF வீரர்களும், சவுர்ய சக்ரா விருது பெற்ற 5 CRPF வீரர்களும் திறந்த ஜீப்பில் அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள். மேலும், 9 இசைக்குழுக்கள் தேசபக்திப் பாடல்களை இசைக்க, 4 பள்ளி அணிகள் கலாச்சார நிகழ்ச்சிகள் வழங்க உள்ளன.