ஜிஎஸ்டி குறைப்பின் நன்மை நுகர்வோரை சென்றடைந்தது – நிர்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலன் நேரடியாக நுகர்வோரிடம் சென்றடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5%, 12%, 18%, 28% என நான்கு நிலைகளில் இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள், சமீபத்திய மறுசீரமைப்பின் மூலம் 5% மற்றும் 18% என இரண்டு நிலைகளாக எளிமைப்படுத்தப்பட்டன. இந்த மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது.
இதன் விளைவாக, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் உணவு மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்டம்பர் 22 முதல் மண்டலம் வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறோம். குறிப்பாக 54 முக்கிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதா என்பதை அரசு கவனித்து வருகிறது. இருசக்கர, மூன்றுசக்கர மற்றும் கார் விற்பனைகள் கூட உயர்ந்துள்ளன. இது ஜிஎஸ்டி குறைப்பின் நேரடி விளைவு,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மூன்றுசக்கர வாகன விற்பனை 79,000 யூனிட்களில் இருந்து 84,000 ஆக உயர்ந்துள்ளது — இது 5.5% அதிகரிப்பு. இருசக்கர வாகன விற்பனை 21.6 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளது. பயணியர் வாகன விற்பனை செப்டம்பரில் 3.72 லட்சம் யூனிட்களைத் தொட்டுள்ளது. டிராக்டர் விற்பனையும் இரட்டிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது. நவராத்திரி காலத்தில் வாங்கல், விற்பனை இரண்டிலும் உற்சாகமான நிலை காணப்பட்டது. தொலைக்காட்சி விற்பனை மட்டும் 30–35% வரை அதிகரித்துள்ளது.”