இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து வெற்றி: தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்று, மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என வென்றது.
ஹாமில்டனில் நடந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஜேமி ஓவர்டன் 28 பந்துகளில் 2 சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடித்து அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹாரி புரூக் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சிறிது சிறிதாக பங்களித்தனர். நியூஸிலாந்து பந்துவீச்சில் பிளேயர் டிக்னர் 4 விக்கெட்களும், நேதன் ஸ்மித் 2 விக்கெட்களும் பெற்றனர்.
176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 33.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ரன்களை எடுத்தது. ரச்சின் ரவீந்திரா 58 பந்துகளில் 54 ரன்களும், டேரில் மிட்செல் 59 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 34 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணிக்காக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களை பெற்றார். தொடரின் முதல் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1ஆம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.