பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
“ஜிஎஸ்டி குறைப்பின் விளைவாக உணவு பொருட்களின் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. மேலும், சீர்திருத்தங்களால் மின்னணு பொருட்களின் விற்பனை சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது,” என்றார்.
பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் பைக்குகள் மற்றும் டிராக்டர்கள் விற்பனையும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘தீபாவளி பரிசு’ மக்கள் அனைவருக்கும் முழுமையாக சென்றடைந்துள்ளது. உள்நாட்டு பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்; இது ‘தற்சார்பு இந்தியா’ வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக உள்ளது.
மத்திய அரசு 54 அத்தியாவசிய பொருட்களை கண்காணித்து வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் கிடைத்த வரிச் சலுகை நுகர்வோருக்கு நேரடியாக சென்றடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பிரதமரின் தீபாவளி பரிசு அறிவிப்பு முழுமையாக நிறைவேறியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
“நவராத்திரி முதல் நாளில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் வியாபாரம் அதிகரித்ததோடு சேமிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது,” என்றார்.