முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
கர்நாடகாவில் தொழில் அமைக்க உலகத் தரத்திலான வசதிகள் உள்ளன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மாநிலத்தைக் குறிவைத்து தவறான கருத்து பரப்புகள் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக சில நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு செல்ல தீர்மானித்துள்ளன. அதனைத் தடுக்க, அந்த நிறுவனங்களுடன் மாநில அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்திய பாஜக அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவற்ற அணுகுமுறையுடன் செயல்படுகிறது. பன்னாட்டு முதலீட்டாளர்களை நாம் சந்தித்து இங்கு தொழில் துவக்க அழைத்து வருகிறோம். ஆனால் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் மத்திய அதிகாரிகள் தலையிட்டு அவர்களை வேறு மாநிலங்களுக்கு திசைதிருப்பிவிடுகின்றனர்.
உதாரணமாக, கூகுள் நிறுவனம் முதலில் தனது அலுவலகத்தை பெங்களூருவில் தொடங்க முடிவு செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு தலையிட்டு, அந்த திட்டத்தை ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்றியது. இது பிரதமர் மோடி, கூட்டணி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கிய ‘அன்பளிப்பு’ போன்றது.
அதேபோல, செமிக்கண்டக்டர் நிறுவனங்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, கர்நாடகாவின் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய அரசே என்று அவர் கூறினார்.