உக்ரைன் படைகளிடம் சரணடைந்த இந்திய இளைஞர்
ரஷ்ய ராணுவத்துக்காக போரில் ஈடுபட்ட இந்திய இளைஞர் ஒருவர் உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் பக்கம் கூறியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்ததாக கூறிக் கொள்ளும் மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்ற இளைஞரின் வீடியோவை உக்ரைன் ராணுவத்தின் 63வது படைப்பிரிவு அதன் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தகவல் குறித்து இந்திய அதிகாரிகளிடம் இருந்து உறுதி செய்யப்படும் தகவல்கள் இதுவரை இல்லை.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், இந்த செய்தி உண்மையைக் கண்டறியும் பணி நடந்து வருவதாகவும், உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
விடாதவில் படிக்க ரஷ்யா சென்ற 22 வயதான முகமது ஹுசைன், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், தண்டனையை தவிர்க்க ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து போரில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
16 நாட்கள் பயிற்சி முடிந்ததும் அக்டோபர் 1 அன்று போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், போரின் போது உக்ரைன் படைகளை கண்டதும் தன்னிடம் சண்டை செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்து சரணடைந்ததாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 27 இந்தியர்களை விடுவிக்க இந்தியா கோரிக்கை விடுத்ததை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை உக்ரைன் போரில் ரஷ்யா சார்பில் சண்டையிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்; 96 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்; மேலும் 16 பேர் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.