பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் டெல்லியில் கைது
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் வழங்கியதாக குற்றசாட்டப்பட்ட முகமது ஆதில் ஹுசைனி (59) என்பவர், டெல்லி சீமாபுரியில் 2 நாட்களுக்கு முன்பு போலீசின் வலையில்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரை சேர்ந்த இவர், சையது ஆதில் ஹுசைன், நசிமுதீன், சையது ஆதில் ஹுசைனி உள்ளிட்ட பல பெயர்களைப் பயன்படுத்தி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு அணு விஞ்ஞானியுடன் இவருக்கு தொடர்பு இருந்தது மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்ததும் கைது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆதிலின் வசமிருந்து ஒரு அசல் பாஸ்போர்ட் மற்றும் இரண்டு போலி பாஸ்போர்ட்கள் மீட்கப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
அதேவேளை, ஆதிலின் சகோதரர் அக்தர் ஹுசைனையும் மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மூன்று பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ததும் விசாரணையில் உறுதியானது.