ரஃபேலில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று ரஃபேல் போர் விமானத்தில் பறந்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன் மூலம் சுகோய் மற்றும் ரஃபேல் ஆகிய இரு முக்கிய போர் விமானங்களிலும் பயணம் செய்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக அவர் பெருமை பெற்றுள்ளார்.
நாட்டின் மூன்று படைகளின் தலைவராக உள்ள திரவுபதி முர்மு, 2023-ம் ஆண்டு சுகோய் விமானத்தில் பறந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரஃபேலில் பயணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு ரஃபேல் விமானத்தில் சுமார் 30 நிமிடங்கள் அவர் பயணம் செய்தார். குரூப் கேப்டன் அமித் கெஹானி விமானத்தைக் கட்டுப்படுத்தினார். மணிக்கு 700 கி.மீ வேகத்தில், 15,000 அடி உயரத்தில், சுமார் 200 கி.மீ தூரம் விமானம் சென்றது. இதே நேரத்தில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கும் மற்றொரு ரஃபேல் விமானத்தில் இணைந்து பறந்தார்.
அம்பாலா விமான தளத்தில் பார்வையாளர் பதிவில், “ரஃபேல் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. இத்தகைய திறன் வாய்ந்த போர் விமானத்தில் பயணம் செய்தது நாட்டின் பாதுகாப்புத் திறன்களால் பெருமை கொள்ள வைத்தது. இந்திய விமானப்படைக்கும், அம்பாலா தள அதிகாரிகளுக்கும் நன்றி,” என குடியரசுத் தலைவர் பதிவு செய்தார்.
சிவாங்கியுடன் சந்திப்பு
ரஃபேல் விமானத்தை இயக்கும் இந்திய விமானப்படையின் ஒரே பெண் விமானி விங் கமாண்டர் சிவாங்கி சிங்கை, குடியரசுத் தலைவர் முர்மு அம்பாலாவில் சந்தித்தார். ரஃபேல் விமானத்தில் அமரச் செய்து, அதன் விவரங்களை சிவாங்கி சிங் விளக்கினார்.
சமீபத்தில் பாகிஸ்தான் ஊடகங்கள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ரஃபேல் விமானம் விழுந்ததாகவும், சிவாங்கி சிங் போர்கைதியாக பிடிபட்டதாகவும் போலி செய்தி பரப்பின. இதை இந்திய அரசு மறுத்தது. தற்போது முர்முவுடன் சிவாங்கி சிங் தோன்றியிருப்பது, பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.