சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கவிருக்கிறேன் என்ற செய்தி தவறு: மாளவிகா மோகனன் விளக்கம்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலுக்கு நடிகை மாளவிகா மோகனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாபி இயக்கத்தில், கே.வி.என் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் சிரஞ்சீவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் முன்னேற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து, மாளவிகா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“வணக்கம் நண்பர்களே! பாபி சார் இயக்கவுள்ள ‘மெகா 158’ படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன் என இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சிரஞ்சீவி சார் உடன் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம் தான், ஆனால் அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்தப் படத்தில் கார்த்திவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து படக்குழுவினரும், கார்த்தி தரப்பும் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
சமீபத்தில் அனில் ரவிப்புடி இயக்கிய படத்தின் பணிகளை முடித்த சிரஞ்சீவி, தற்போது பாபி இயக்கவுள்ள புதிய படத்துக்காக தேதிகளை ஒதுக்கியுள்ளார்.